செருப்பு மாலை அணிந்து ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த நபர்...!

செருப்பு மாலை அணிந்து ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த நபர்...!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்கவும், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பவர்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் முத்தரசன் என்பவர் செருப்பு மாலை அணிந்தும் நெற்றியில் நாமம் இட்டபடி அரை மொட்டையும் அடித்துக்கொண்டு  வந்து கோரிக்கை மனுவை வழங்கி உள்ளார்.

இந்த கோரிக்கை மனுவில், விளாப்பாக்கம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஏரிகள், 14 குழுக்கள் மற்றும் பல நீர் வழிப்பாதைகளை அரசு ஊழியர்கள், போலி நிருபர்கள் மற்றும் சில சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு உடந்தையாக லஞ்சம் பெற்றுக் கொண்டு விளாப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், விளாப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர், திமிர் வருவாய் அலுவலர் மற்றும் ஆற்காடு வட்டாட்சியர் உட்பட பல அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ஆக்கிரமிப்பு தொடர்பாக பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனவே இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், முத்தரசன், செருப்பு மாலை அணிந்தும் அரை மொட்டையுடனும் நீர் பிடிப்பு பகுதிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.