ரயிலின் இடையில் சிக்கிய நபரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய போலீசார்..! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

ரயிலின் இடையில் சிக்கிய நபரை இருப்பு பாதை காவலர்கள் மீட்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ரயிலின் இடையில் சிக்கிய நபரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய போலீசார்..! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியில் வசிப்பவர் சிவகுமார்.  இவர் தொழில் சம்பந்தமாக கண்ணனூரிலிருந்து யஷ்வந்த்பூர் செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அந்த ரயில் கோவை ரயில் நிலையத்தின் மூன்றாம் நடை மேடைக்கு வந்தது. அயர்ந்த உறக்கத்தில் இருந்த சிவகுமார் ரயில் புறப்பட்ட நேரம் பார்த்து திடீரென கீழே இறங்க முற்பட்டுள்ளார். அப்போது நிலை தடுமாறி நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையில் விழுந்தார். 

இதைக்கண்ட இருப்புப்பாதை தலைமை காவலர் ரமேஷ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அருண் ஜித், பெண் தலைமை காவலர் மினி ஆகியோர் உடனடியாக விரைந்து நடைமேடையிலிருந்து ரயிலுக்கு அடியில் செல்ல இருந்த அந்த நபரை  இழுத்து காப்பாற்றினர். இதில் சிவகுமாருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. 

தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிவகுமாருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  விபத்தின் பதைபதைக்க வைக்கும் வீடியோவும் வெளியாகியது. இதனிடையே  பயணியை பாதுகாப்பாக காப்பாற்றிய ரயில்வே காவலர்களை அங்குள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.