17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சம்பவம்... பாலாற்றில் கரைபுரண்டோடும் மழை வெள்ளம்...

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சம்பவம்... பாலாற்றில் கரைபுரண்டோடும் மழை வெள்ளம்...

சிவகங்கை மாவட்டத்திலேயே மிகப் பெரிய கண்மாய் என்ற பெருமையைக் கொண்ட திருப்பத்தூர் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வரத்து பாலற்றின் வழியாக வரத் துவங்கியுள்ளது. இந்த பாலாறு கடந்த 17 வருடங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய பகுதிகளில் சுமார் 84 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. அதோடு நத்தம் அருகில் உள்ள கரந்தமலை பகுதியிலிருந்து ஒவ்வொரு கண்மாயாக நிரம்பி திருப்பத்தூருக்கு பாலாற்று வழியாக தண்ணீர் வந்து கொண்டு இருக்கின்றது. இதனையடுத்து இப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் பயணிப்பவர்கள் ஆற்றின் இருபுறமும் நின்று தண்ணீர் வருவதை பார்ப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.

பின்பு தண்ணீர் நெருங்கி வர வர பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க, இருகரை தொட்டு கரைபுரண்டு வந்த மழை நீரை மலர்தூவி வரவேற்றனர். இளைஞர்களும், சிறுவர்களும் தண்ணீரை காண்பதற்காக குவிந்து வருகின்றனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்று வழியாக பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வரத்து வரதுவங்கியுள்ளது. இதே போன்று தொடர்ந்து ஒரு வாரம் மழை பெய்தால் கடந்த 2005 ல் வெள்ளம் வந்தது போல் இந்த ஆண்டும் வெள்ளம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல வருடங்களாக பராமரிப்பின்றி காணப்படும் இந்த பாலாற்று படுகையில் கருவேல மரங்கள், சீமை கருவை மரங்கள் காடு போல் வளர்ந்து தண்ணீர் செல்லும் பாதையை மறைத்து உள்ளதால் போர்க்கால அடிப்படையில் இவற்றை அகற்ற இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.