தமிழகத்தின் பல பகுதியில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி...

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல  மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதியில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி...

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த பெய்தது. ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. வெயில் வாட்டி வதைத்த சூழலில், திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல், அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த சூழ்நிலையில், இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையால், குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளும், கோடை உழவு செய்யக்கூடிய விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. நாட்றம்பள்ளி, வெலக்கல்நத்தம், பச்சூர், பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த  மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

 முன்னதாக காற்றின் திசை வேகமாறுபாடு மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்  மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

மேலும் தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 4 0 முதல் 50 கி.மீ., வேகத்தில்  பலத்த காற்று  வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது