எங்கள் கோரிக்கை நிறைவேறாமல் இருப்பதற்கு காரணம் அமைச்சர் தான்..மருத்துவர்கள் கண்டனம் ...

எங்கள் கோரிக்கை நிறைவேறாமல் இருப்பதற்கு காரணம் அமைச்சர் தான்..மருத்துவர்கள் கண்டனம் ...
Published on
Updated on
2 min read

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.


இன்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு சார்பில் சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா  காந்தி தாய் சேய் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து பேரணியாக சென்று கோரிக்கை மனுவை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்த பின்னர் மௌன போராட்டம் நடத்தலாம் என திட்டமிட்டு இருந்தனர்.

அதன்படி, திருவல்லிகேணி  கஸ்தூரிபா மருத்துவமனையில் இருந்து பேரணியாக செல்லத் துவங்கிய 27 மருத்துவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி மருத்துவமனை வாசலில் வைத்து கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.

அப்போது பேட்டி அளித்த அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை :

அரசாணை 304 ன் படி  12 ஆண்டுகளுக்கான ஊதிய பட்டை 4 வழங்க வேண்டும் என்றும் கொரோனவால் உயிரிழந்த மருத்துவர்  விவேகானந்தனின்  மனைவி திவ்யாவுக்கு அவரின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் வைத்த மனுவை முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் வைத்த பின்னர் மௌன போராட்டம் நடத்தலாம் என இருந்த எங்களை இங்கு காவல்துறை தடுத்து நிறுத்தி உள்ளது.

மேலும்,எங்கள் கோரிக்கை குறித்து  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் 15 முறைக்கு மேலாக சந்தித்து கோரிக்கை வைத்து உள்ளோம்.ஆனால் அவர் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என கூறி வருகிறார்.எனவே,முதல்வரின் கவனத்தை ஈர்க்க இந்த போராட்டத்தை தற்போது நடத்துகிறோம் என கூறினார்.

மேலும், கொரோனவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.ஆனால், 10 பைசா கூட இன்னும் இறந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கவில்லை என தெரிவித்தார்.அதனுடன் எங்கள் கோரிக்கை நிறைவேறாமல் இருப்பதற்கு காரணம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தான் என குற்றம் சாட்டினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com