"ஏழு பேரை திமுக விடுதலை செய்தது தீவிரவாதத்தை ஆதரிப்பதன் அடையாளம்" ஆளுநர் குற்றச்சாட்டு!

"ஏழு பேரை திமுக விடுதலை செய்தது  தீவிரவாதத்தை ஆதரிப்பதன் அடையாளம்" ஆளுநர் குற்றச்சாட்டு!

ஏழு பேரை விடுதலை செய்தது இவர்கள் அராஜகத்தை, வன்முறையையும், தீவிரவாதத்தையும் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக உள்ளது என ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு கோவை வந்தடைந்தார். இன்று காலை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கௌமார மடாலயம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளிடம் ஆசி பெற்றார். மடாலயம் வந்த ஆளுநருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளிடம் ஆசி பெற்று, வழிபாடு செய்தவர் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். ஆளுநரோடு பாஜக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராகிம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். 

இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது, "திராவிட முன்னேற்றக் கழக அரசு காலம் காலமாக ஒன்றைத்தான் செய்து வருகிறது. தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதும், தவறான முன்னுதாரணங்களை உதாரணமாக காட்டி மேலும் மேலும் தவறுகளை செய்வதும் தான் திமுக அரசின் சாதனையாக உள்ளது. கலைஞர் காலத்தில் நடைபெறாததெல்லாம் ஸ்டாலின் காலத்தில் நடைபெறுவது தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை. அராஜகம் செய்பவர்களின் கைகளில் அடங்கிப் போகிற மாநிலமாக ஆகிவிடுமோ என்ற அச்சம் நல்லுணர்வு படைத்த அத்தனை தமிழ் நெஞ்சங்களிலும் இருக்கிறது என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், வெடிகுண்டு வைத்தவர்களை எல்லாம் விடுதலை செய்வதும், தியாகிகளை போல் கொண்டாடுவதும் உள்ளது என்றால் பிறகு எப்படி ஜனநாயகம் தழைத்தோங்கும்? எப்படி மக்களாட்சி தொடர்ந்து தமிழக மக்களுக்கு நன்மை செய்ய இயலும்? என கேள்வி எழுப்பினார்.

ராஜீவ் காந்தியை கொன்றவர்களை கட்டி அணைத்தார். அப்போது அவர் ஒரு செய்தி சொல்கிறார். எந்தத் தவறு இன்றைக்கு நாம் செய்கிறோமோ, அந்த தவறு மீண்டும் நம்மை வந்து தாக்கும். அதுதான் கர்மா. இன்றைக்கு ஸ்டாலின் எந்த தவறுகளை செய்கின்றாரோ அந்த தவறுகளுக்குரிய விலையை அவர் நிச்சயமாக கொடுக்க வேண்டியது இருக்கும் என தெரிவித்தார்.