"தலை தூக்கும் தீண்டாமை" அமமுக செயற்குழு கண்டன தீர்மானம்!

"தலை தூக்கும் தீண்டாமை" அமமுக செயற்குழு கண்டன தீர்மானம்!

தலை தூக்கும் தீண்டாமைக்கு எதிராக தெருமுனை, பொதுக்கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என  அமமுக செயற்குழு கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ளர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடந்த இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அமமுகவின், தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதாகவும், தேர்தலை நடத்தும் வரை தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கொண்டு வந்துள்ள "நில ஒருங்கிணைப்பு (திருத்த) சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது எனவும் இச்சட்டத்தின் மூலம் தொழில்வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்கள் அரசால் அபகரிக்கப்படுவதாகவும்  இந்த சட்டத்தின் மூலம் திமுக அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாகவும் அமமுக செயற்குழு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என அறிவித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாருக்கு கண்டனம் தெரிவித்துள்ள செயற்குழு திமுக அரசு இத்திட்டத்தை கைவிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தொடர்ந்து, சுங்கச்சாவடி, சுங்க கட்டணத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், சாலை வரி, சொத்துவரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இறுதியாக, அமைச்சர்களின் ஆணவ பேச்சு, தலை தூக்கும் தீண்டாமை ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் தெருமுனை, பொதுக்கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:"இன்று சர்வதேச துரோகிகள் தினம்" சஞ்சய் ராவத் கிண்டல்!