இஸ்ரேலிலிருந்து இரணடாவது விமானம் டெல்லி வந்தது!

போரினால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் அதிதீவிர போரில் இரு தரப்பிலும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதையடுத்து, இஸ்ரேலில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகள் மீட்டு வருகின்றன.

அந்தவகையில் இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை 'ஆபரேசன் அஜய்' என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. அதன்படி 21 தமிழர்கள் உள்பட 212 இந்தியர்கள் அடங்கிய முதல் சிறப்பு விமானம் ஒன்று நேற்று இந்தியா வந்தடைந்தது. அதனை தொடர்ந்து  டெல் அவிவ் நகரில் இருந்து 28 தமிழர்கள் உட்பட 235 இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தது. அப்போது மத்திய அமைச்சர் ராஜ்குமார் ராஜன்சிங் ஆனைவரையும் நேரில் சென்று வரவேற்றார். இதன் மூலம் இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டோர் எண்ணிக்கை 447 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விமானத்தில் வந்தடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேரை, அவர்களது சொந்த ஊருக்கு அழைத்து செல்ல  தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com