வாத்தியார் குச்சியை வைத்து மிரட்டுவது போல சபாநாயகர் மிரட்டுகிறார்...! அன்புமணி காட்டம்...!!

வாத்தியார் குச்சியை வைத்து மிரட்டுவது போல சபாநாயகர் மிரட்டுகிறார்...! அன்புமணி காட்டம்...!!

தலைமை ஆசிரியர் கையில் உள்ள குச்சியை வைத்துக்கொண்டு மிரட்டுவது போல சபாநாயகர் செயல்பாடு உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

திண்டுக்கல் தெற்கு மாவட்டம் சார்பாக சின்னாளபட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 'பாமக 2.0' என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுவையில், தமிழ்நாட்டிலேயே பெரிய மதுபான கூடம் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் என்றும், திமுக ஆட்சியில் மதுபானம் வெள்ளகாடாக ஓடுகிறது என்றும் கூறினார். 

தொடர்ந்து, திமுகவை தோற்றுவித்த அண்ணா அவர்களுடைய கொள்கை பூரண மதுவிலக்கு. அதனை இன்று திமுக ஆட்சி செயல்படுத்துகிறதா என கேள்வி எழுப்பினார். ''மதுவினால் வரும் வருமானம் தொழு நோயாளின் கையில் வெண்ணையை கொடுப்பது போல உள்ளது. எனவே மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்'' என அறிஞர் அண்ணா கூறியதை சுட்டிக்காட்டிய அவர் இந்த ஆண்டு மதுவினால் வரும் வருமானம் 45 ஆயிரம் கோடி என்றும் இது அவர்களை பொறுத்தவரையில் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி, என்னை பொருத்தவரையில் இது அசிங்கம், அவமானம் என பேசினார். 

தொடர்ந்து, ''சட்டப்பேரவையானது ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்தப்பட வேண்டும் .ஆனால் பதினைந்து நாட்கள் தான் தற்போது நடத்துகின்றனர். சபாநாயகர் அப்பாவு நல்ல மனிதர் தான். ஆனால் யாரையும் பேச விட மாட்டார். அவரே கேள்வி எழுப்புகிறார், பதிலும் அவர் சொல்லுகிறார். எம்.எல்.ஏக்கள் கேள்வி கேட்டால் சபாநாயகர் பதிலளிக்கிறார். இவர் நல்ல சபாநாயகர் தான்'' என பேசினார். 

மேலும், ''சபாநாயகர் என்பவர் நடுநிலைமையான ஒருவராக இருக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு 25 சதவீதம் எதிர்க்கட்சியினருக்கு 75 சதவீதமும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ஆனால் ஒரு சர்வாதிகாரியை போலவும்  தலைமை ஆசிரியர் கையில் உள்ள குச்சியை வைத்துக்கொண்டு மிரட்டுவது போலவும் சபாநாயகர் செயல்பாடு உள்ளது'' என அவர் பேசினார்.