மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்...! கண்டுகொள்ளாத அரசு...!! வேதனையில் மக்கள் நலப் பணியாளர்கள்...!!! 

மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்...! கண்டுகொள்ளாத அரசு...!! வேதனையில் மக்கள் நலப் பணியாளர்கள்...!!! 

மூன்றாவது நாளாக தொடரும் மக்கள் நலப் பணியாளர்களின் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்  அரசாங்கங்களை நம்பி இன்று நடுத்தெருவில் நிற்பதாக மக்கள் நலப் பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலப் பணியாளர்கள்  3 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 19ஆம் தேதி முதல் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லபாண்டியன் தலைமையில்  2000க்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ள தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லபாண்டியன் கூறும்போது, கடந்த 1990 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசினால் பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 33 வருடங்களாக தங்களது பணியை அரசு நிரந்தரம் செய்யாத காரணத்தினால் மூன்று முறை பணிநீக்கம் செய்யப்பட்டு மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் கூறியுள்ளார்.  

தொடர்ந்து தற்பொழுது ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசு தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அதேபோல கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் திமுக அரசால் வழங்கப்பட்ட காலமுறை ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, இறந்த பணியாளர்கள் குடும்பங்களுக்கு திமுக அதன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள படி நிவாரண நிதியும் வயது முதிர்வால் தற்பொழுது பணி நியமனம் கிடைக்காத பணியாளர்களுக்கும் தற்பொழுது ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் ஓய்வூதியமும்  வழங்க வேண்டுமெனவும் மேலும் பணியில் இருக்கும்போது இறந்தவர்களின்  வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.