அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்..! காரணம் என்ன தெரியுமா?

அரசு  பள்ளியில்  மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்..! காரணம் என்ன தெரியுமா?

திருவண்ணாமலையில் மதிய உணவில் பல்லி விழுந்தது அறியாமல் உணவு சாப்பிட்ட 63க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த தண்டரை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்தது அறியாமல் உணவு சாப்பிட்ட 63க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தண்டரை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் தண்டரை, சு.நல்லூர் ஆகிய இரண்டு கிராமத்திலிருந்து 150 மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் மதிய உணவாக சர்க்கரைப் பொங்கல் செய்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியுள்ளனர்.

அப்போது சக்கரை பொங்கலில் சிறிய அளவில் பல்லி விழுந்ததை அறியாமல் சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது,  மாணவர்கள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் போது பல்லி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிறிது நேரத்தில் மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது உடனடியாக பள்ளியின் ஆசிரியர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து 5 ஆம்புலன்ஸ்கள் தண்டரை அரசு உயர் நிலைப்பள்ளிக்கு வரவைக்கப்பட்டு உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதிய உணவில் பல்லி இருந்தது அறியாமல் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாணவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் வாந்தி மயக்கம் ஏற்பட்ட மாணவர்கள் உடல் நிலையில எந்த பாதிப்பும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வெறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும்  படிக்க    | சுகாதாரத்துறை சார்பில் 14 கோரிக்கைகள்...மத்திய அமைச்சரை சந்தித்த மா.சுப்பிரமணியன்!