பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பப்ஜி  மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பப்ஜி விளையாட்டின் மூலம் பிரபலமான மதன் பணம் சம்பாதிக்கும் நோக்கில் பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்து ஆபாசமான வார்த்தைகளால் பேசி விளையாடியதாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பப்ஜி மதன் முறைகேடாக சம்பாதித்த 2 சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

மதனுக்கு உடந்தையாக செயல்பட்ட மதனின் மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் மதன் மீது இணைய வழியில் 200க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டு அது தொடர்பாக மதனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஆதாரங்களை திரட்ட வேண்டி அவரின் செல்போன், லாப்டாப் உள்ளிட்டவைகளும் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் மதன் தரப்பில் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் அவர் ஓராண்டுக்கு பிணையில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.