கிடு கிடுவென உயர்ந்த வைகை அணை...  கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

கிடு கிடுவென உயர்ந்த வைகை அணை...  கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை இன்று அதிகாலை 3 மணிக்கு 66 அடியை எட்டியது. 

இதனையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  வைகை அணை மதகுபகுதியில் அமைக்கப்பட்ட அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. 

வைகை அணையின் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை சார்பில் 5 மாவட்ட நிர்வாகத்திற்கும், பல்வேறு து¬றை அரசு அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு தற்போது வினாடிக்கு 2 ஆயிரத்து 662 கனஅடி நீர்வரத்து இருப்பதால் வைகை அணை இன்னும் ஓரிருநாளில் முழுக்கொள்ளளவை எட்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தவுடன் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு 69 அடியை எட்டியவுடன் 3வது மற்றும் கடைசி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறந்துவிடப்படும் என்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். 

வைகை அணை விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் நிலை உள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com