மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படங்கள் எடுக்க, தடை இல்லை!

மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படங்கள் எடுக்க, தடை இல்லை!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படங்கள் எடுக்கவோ, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு தடை விதிக்கவோ முடியாது -  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை, புதூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்னும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "உலக பிரசித்தி பெற்ற கோவிலாக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இருந்து வருகிறது. கோயிலின் உள்ளே செல்போன் கேமரா மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

கோயிலில் உள்ளே உள்ள சிலைகள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றை புகைப்படங்கள் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட சில புகைப்பட கலைஞர்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சிற்பங்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றை எடுத்து தங்களின் Logo வைத்து பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி இவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, அனுமதி இல்லை என பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தனி நபர்கள் எடுக்காத வண்ணம் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவிட வேண்டும்." எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள், "மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் உள்ளே புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, அதன்படியே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்படுகிறது" என மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கோவில் நிர்வாகம் தரப்பில், கூறப்பட்டுள்ளதை எடுத்துரைத்தனர். 

மேலும், அமெரிக்கா போன்ற நாடுகள் அங்கே 100 வருட புராதன சின்னங்கள் என்று கூறி படங்களை எடுத்து பல கோடிக்கு வியாபாரம் செய்யும்  சூழலில், நாம் 2000 வருட புராதன சின்னங்களை வைத்துக் கொண்டு எவ்வித செயல்பாடுகளும் இல்லாமல் இருக்கின்றோம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படங்கள் எடுக்கவோ, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு தடை விதிக்கவோ முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது, மதுரை கிளையின் உயர் நீதிமன்றம்.