குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு...பாஸ்போர்ட் வழங்குவதற்கு தடை இல்லை ..!

முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு...பாஸ்போர்ட் வழங்குவதற்கு தடை இல்லை ..!

திருச்சியை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மலேசியாவில் தொழில் செய்து வருகிறார்.இவர் புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி விண்ணப்பித்ததாகவும்  ஆனால் குற்றவழக்குகளை காரணம் காட்டி அவருக்கு  பாஸ்போர்ட் வழங்க இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவுக்கு எதிர்த்தும், தமக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரியும் ஷேக் அப்துல்லா  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை என்ற நிலையில் இருந்தால் பாஸ்போர்ட் வழங்க எந்த தடையும் இல்லை என தெரிவித்தார்.

வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றத்தின் உத்தரவு தேவை எனவும்,  இந்தியா வருவதற்காக பாஸ்போர்ட் கோரினால் நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது மனுவை  ஏற்றுக்கொண்டு உடனடியாக அவருக்கு பாஸ்போர்ட் வழங்க  இந்திய தூதரகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.