"மிகவும் ஆபத்தான ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநராக இருப்பது ஏற்புடையதல்ல" திருமாவளவன் குற்றச்சாட்டு!

"மிகவும் ஆபத்தான ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநராக இருப்பது ஏற்புடையதல்ல" திருமாவளவன் குற்றச்சாட்டு!

"மிகவும் ஆபத்தான ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநராக இருப்பது ஏற்புடையதல்ல" என திருமாவளவன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து, ஆளுநர் ஆர்.என் ரவியை அகற்றக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கையெழுத்தை பெறுவதற்காக சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்திற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று வந்திருந்தார். அப்போது திருமாவளவன் மற்றும் விசிக நிர்வாகிகள் கையெழுத்தை படிவத்தில் பெற்றுக் கொண்டார்.

பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாடு அரசுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். பெரியார், அம்பேத்கர் போன்ற மாமனிதர்கள் பெயரை கூட உச்சரிக்க கூச்சப்படுகிறார். சமூக நீதி, சமத்துவம் என்ற சொற்களையும் உச்சரிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். ஒரு சனாதன பிற்போக்குவாதி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது வருத்தம் அளிக்கிறது. அவரை திரும்ப பெற வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்க துவங்கி விட்டது.

அரசியல் கட்சிகள் மட்டும் இன்றி, பெரும்பான்மையான மக்களும் ஆளுநரின் இந்த போக்கை கண்டிக்கிறார்கள். அதோடு அவர் பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து அவரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கிறார்கள். அந்த வகையில் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைப்பதற்காக மதிமுக துவங்கியிருக்கும் இந்த கையெழுத்து இயக்கம் மூலமாக ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களின் கையெழுத்தை பெற திட்டமிட்டு இருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் ஆர் என் ரவி, தமிழ்நாட்டில் தொடர்ந்து பதவியில் இருந்தால் மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார். சட்டம், ஒழுங்கு சீர்குலைப்பதற்கான அனைத்து வேலைகளும் ஈடுபடுவார். மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் மக்களை தூண்டி விட்டு மணிப்பூரிலே இன்று நடப்பது போன்ற பாதிப்பை ஏற்படுத்த வழி வகுப்பார். மிகவும் ஆபத்தான ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநராக இருப்பது ஏற்புடையதல்ல.  மதிமுகவின் கையெழுத்து இயக்கத்தில் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டியது இன்றியமையாதது. குடியரசுத் தலைவர் சுதந்திரமாக செயல்பட மாட்டார் என்பது நமக்குத் தெரியும் இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் குரல் இதுதான் என்பதை டில்லியில் அமர்ந்திருப்பவர்கள் அறிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

இதையும் படிக்க:'இரவில் கழிவுநீரை ஆற்றில் கலக்கும் சாய ஆலையில்' ஆட்சியர் ஆய்வு !