நாட்டின் உடனடி தேவை இதுதான்... பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை...

தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உடனடி தேவை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நாட்டின் உடனடி தேவை இதுதான்... பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை...

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 

இந்தியாவில் முழுமையான சமூகநீதியை உறுதி செய்வதற்கு வசதியாக 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் அம்மாநில அனைத்துக் கட்சிகள் குழுவும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து இதை வலியுறுத்தியுள்ளது.

இந்தியா கல்வி மற்றும் சமூக அடிப்படையில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடு என்ற அடிப்படையில், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களை முன்னேற்றுவதற்காக இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நிகர்நோக்கு நடவடிக்கைகள் (Affirmative Actions) மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றன. அதற்கான உரிமைதாரர்களின் அளவை தீர்மானிப்பதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான் மிகவும் சரியான நடவடிக்கை என்ற நிலையில், அதை மேற்கொள்ள தாமதிப்பது நியாயமல்ல.

இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தேவையை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களும் பல்வேறு தருணங்களில் வலியுறுத்தியுள்ளன. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சியில் 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பிறகு கடந்த 90 ஆண்டுகளாக இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப் பட்டு வரும் போதிலும் அது இன்று வரையில் நனவாகாத கனவாகவே தொடர்வது வருத்தமளிக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன், வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட 1980&ஆம் ஆண்டிலிருந்து கடந்த 42 ஆண்டுகளாக சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நான் வலியுறுத்தி வருகிறேன். மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகித்த போதெல்லாம் இதை வலியுறுத்தியது. அதை ஏற்றுக் கொண்டு 2001&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி ஒப்புக்கொண்ட நிலையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், சில அதிகாரிகள் செய்த சதி ஆகியவற்றால் அந்த வாய்ப்பு கை நழுவிப் போய்விட்டது. அது சமூகநீதிக்கு பெரும் பின்னடைவு ஆகும்.

அதேபோல், 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்ட மனுவை 2008-ஆம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் அப்போதைய மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி இராமதாஸ் வழங்கினார். அதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது சாதி, சமூக, பொருளாதார கணக்கெடுப்பாக மாற்றப்பட்டு, அதன் விவரங்கள் கூட வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் கடந்த இரு பத்தாண்டுகளாக கைநழுவிப் போன சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை இம்முறையும் கைவிட்டு விடக் கூடாது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஏற்கனவே தாமதமாகி விட்ட நிலையில், அதற்கான கட்டமைப்புகளில் சாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து, அதனடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதை செய்வது கடினமான ஒன்றல்ல... மத்திய அரசு நினைத்தால் சாத்தியமாகும்.

மராத்தா இட ஒதுக்கீட்டு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்று ஆணையிட்டது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை களையும் வகையில், அண்மையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மத்திய அரசு  திருத்தியது. அதேபோல், சாதிவாரி மக்கள்தொகையையும் கணக்கெடுக்க வேண்டும்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும், எதிர்க்கட்சி வரிசைகளில் உள்ள காங்கிரசும், சமாஜ்வாதி, இராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக்  கட்சிகளும் ஆதரிக்கின்றன. இந்த நடவடிக்கையை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. எனவே, 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். பிகார் மாநில முதல்வரைப் போலவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அனைத்துக் கட்சித் தலைவர்களை தில்லிக்கு அழைத்துச் சென்று சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்.