"திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்" புத்தகம் வெளியீடு!

"திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்" புத்தகம் வெளியீடு!

"திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்" புத்தகம் அன்பகத்தில் வெளியாகியிருந்தால் திமுக மாணவர் அணிக்கு வருமானம் கிடைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், திருவாரூர் முத்துவேல் கருணாநிதி என்ற தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நூலை வெளியிட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால், கரு. பழனியப்பன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது, நிகழ்ச்சியில் பேசிய கரு.பழனியப்பன், கலைஞரின்  கடிதங்கள் அனைத்தும் உலகத்தின் வரலாறு எனக் குறிப்பிட்டார். கருணாநிதி பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும், அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லக் கூடியவராக இருந்தார் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய நக்கீரன் கோபால், பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களால் தான் மேடையில் இருந்து உரையாற்றும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்

பின்னர் மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்” என்ற நூலின் தலைப்புடன் தன் பெயரைச் சேர்த்து சொல்லி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவியேற்றதைக் குறிப்பிட்டார். மேலும், இந்த நிகழ்ச்சி அன்பகத்தில் நடைபெற்றிருந்தால் மாணவ அணியினருக்கு வருமானம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.