இன்று பில்கிஸ் பானு, நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் - குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

இன்று பில்கிஸ் பானு, நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் - குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரையும், அவரது 2 வயது மகனையும் கொடூரமாக கொன்றது.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த வழக்கில் குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு அண்மையில் விடுதலை செய்ததது. பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விடுதலையை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது "கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு படுகொலை நிகழ்வுகளை ஒரு கொலை சம்பவத்துடன் ஒப்பிட கூடாது. அதற்கும் இதற்கும் அத்தனை வேறுபாடு இருக்கிறது. ஆப்பிள் பழத்தை நீங்கள் ஆரஞ்சு உடன் ஒப்பிடுவீர்களா? தண்டனை காலத்தில் குற்றவாளிகளுக்கு சுமார் 3 ஆண்டுகள் பரோல் விடுப்பை அரசு வழங்கியுள்ளது.


ஒரு குற்றவாளி 1500 நாட்கள் பரோலில் இருந்துள்ளார். என்ன மாதிரியான கொள்கையை பின்பற்றுகிறீர்கள்?குற்றம் செய்பவர்கள் சமூகத்திற்கு எதிரானவர்கள். அனைத்து குற்றவாளிகளையும் சமமாகக் கருத முடியாது. இன்று பில்கிஸ் பானு, நாளை யார்? அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம்.என்ன அடிப்படையில் அவர்களை விடுவித்தனர் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அதனை நீங்கள் காட்டாவிட்டால் நாங்கள் முடிவெடுக்கவேண்டியிருக்கும் " என்று காட்டமாக கூறி இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com