இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை...பெருமாள் கோயில்களில் கோலாகலம்!

Published on
Updated on
1 min read

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் பெருமாள் கோயில்களுக்கு படையெடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகேயுள்ள சேங்கனூர் சீனிவாச பெருமாள் கோயில் மூலவருக்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காலை முதலே வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள 13 ஆவது திவ்ய தேசமான உப்பிலியப்பன் திருக்கோயில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நிகழ்த்தப்பட்டது.

இதேபோல், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நான்காம் மாட வீதியில் அமைந்துள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் பூத நாராயணருக்கு அரிசி, மாவு, கதம்பம், பன்னிர்,பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பெருவாரியான பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.

பூலோக வைகுந்தம் என்றழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் அதிகாலை முதலே புரட்டாசி பூஜைகள் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு  மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும்  வேண்டிச் செல்கின்றனர். 

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு  அபிஷேகம் செய்து சத்தியநாராயணன் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோயிலில் குவிந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்து கோவிந்தா முழக்கமிட்டு வழிபட்டுச் செல்கின்றனர்.
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com