தக்காளி விலை மேலும் குறைவு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.. விலை குறைய காரணம் என்ன?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், தக்காளி விலை மேலும் குறைந்துள்ளதால் மக்கள் ஆர்வமுடன் அதிகளவில் வாங்கிச்சென்றனர்.

தக்காளி விலை மேலும் குறைவு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.. விலை குறைய காரணம் என்ன?

வடமாநிலங்களில் இருந்து வரத்து குறைவு மற்றும் உற்பத்தி பாதிப்பு காரணமாக, அத்தியாவசிய காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது.

குறிப்பாக, தினசரி பயன்படுத்தும்  தக்காளி விலை கடந்த சில வாரங்களாக கட்டுக்கடங்காமல்  அதிகரித்து விற்பனையானது.  இதனால் இல்லத்தரசிகளும், விற்பனை குறைந்ததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து பண்ணை சந்தையில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனிடையே கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று தக்காளி கிலோ 55 ரூபாய்க்கு விற்பனை செய்தது இல்லத்தரசிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் வரத்து அதிகரிப்பால், கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு கிலோ தக்காளி  சுமார் 10 ரூபாய் குறைந்து, 45 முதல் 50 ரூபாய்க்கு  விற்பனையாகிறது. இதேபோல், சின்ன வெங்காயம், கேரட், பீன்ஸ், வெண்டைக்காய், முருங்கைக்காய், வாழைக்காய்  உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் குறைந்துள்ளன.