
சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா:
சென்னை பெசண்ட் நகர் ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இன்று மாலை 5.45 மணியளவில் கொடியேற்ற விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் விழாவிற்கு வருகை தருவார்கள் . இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஏற்பாடுகள்:
இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெசண்ட் நகர் ஆலய வருடாந்திர திருவிழா இன்று தொடங்குவதை கருத்தில் கொண்டு பெசண்ட் நகரில் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இன்று பிற்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
அறிவிப்பு:
திரு.வி.கா. பாலம், எஸ்.வி பட்டேல் சாலையிலிருந்து பெசண்ட் நகர் அவென்யூ வழியாக பெசண்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்ல விரும்பும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடை செய்யப்பட்டு எல்பி சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டு இலக்கை அடையலாம் என தெரிவித்துள்ளது.
இதேபோல், மேற்கண்ட வாகனங்கள் ஆவின் பூங்கா, எல்.பி சாலை வழியாக என்.ஜி. சாலை பெசண்ட் நகர் ஒன்றாவது பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம். இதேபோன்று பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.