” இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்” - சென்னை உயர்நீதிமன்றம்.

” இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்” - சென்னை உயர்நீதிமன்றம்.

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பாலியல் ரீதியான உறவு தொடர்பான விவகாரத்தை கையாள்வது குறித்த வழக்குகளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் அமர்வு விசாரித்து வருகிறது. 

சிதம்பரத்தில் சிறுமி ஒருவருக்கு சிறுவன் தாலி கட்டியது தொடர்பான வழக்கு மற்றும் தருமபுரியில் நடைபெற்ற இள வயது திருமணம் தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அந்த வழக்கை முடித்து வைத்தனர். 

இதனையடுத்து, தர்மபுரியில்  இளம் வயது திருமணம் தொடர்பான வழக்கில் 17 வயதுக்குட்பட்ட இருவரையும் காவல்துறையினர் நடத்திய விதம் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை குழந்தைகளாக கருத வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.  

அதேபோல, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனை செய்யப்படுவதை தவிர்க்கும் படி காவல்துறையினருக்கு அறிவுறுத்துமாறு டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

மேலும், ஆண்மைத்தன்மை சோதனை செய்வதில் அறிவியல் தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டுமெனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க    | "சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க யாருக்கும் அதிகாரமில்லை" உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!