கோவையில் இன்று யு.பி.எஸ்.சி தேர்வு... 10 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்...

குடிமைப்பணிக்கான முதனிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

கோவையில் இன்று யு.பி.எஸ்.சி தேர்வு... 10 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்...

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைத்தால் நடத்தப்படும் குடிமை பணிக்கான முதனிலைத் தேர்வு (யு.பி.எஸ்.சி)  கோவையில் இன்று 25 மையங்களில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் நடைபெறும் இத்தேர்வினை கோவையில் மட்டும் 10 ஆயிரத்து 955 பேர் தேர்வு எழுத உள்ளனர். 

இதனை முன்னிட்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கோவையில் துணை ஆட்சியர் நிலையில் எட்டு உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்களும், வட்டாட்சியர் நிலையில் 25 தேர்வு மையங்களுக்கும், தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர்களும், துணை வட்டாட்சியர் நிலையில் 46 தேர்வு மைய துணை கண்காணிப்பாளர்களும், 931 அறை கண்காணிப்பாளர்களும் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர்.

தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் செல்போன் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன. முற்பகல் தேர்வு எழுதுவோர் மையத்திற்கு காலை 8.30 முன்பாகவும், பிற்பகல் தேர்வு எழுதுவோர் 1.30 மணிக்கு முன்பாகவும் வளாகத்திற்குள் வந்துவிட தேர்வுக்கான நுழைவுச்சீட்டுடன் வந்துவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு வளாகத்திற்குள் செல்போன், டிஜிட்டல் கைக்கடிகாரம், உள்ளிட்ட மின்னியக்க கருவிகள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், கருப்பு நிற பால் பாயிண்டு பேனா மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேலும், கொரோனா தொற்று தொடர்பான அரசு கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி தேர்வு என்பது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்ஃ.எஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான அதிகாரிகளை தேர்வு செய்யும் நாட்டின் முதன்மையான தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.