முதுநிலை மருத்துவ நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்ற மத்திய அரசின் அறிவிப்பை, முட்டையை கையில் எடுத்து காண்பித்து மத்திய அரசை அமைச்சர் உதயநிதி விமர்சித்தார்.
மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு தேர்ச்சி முக்கியம் என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து, மாணவி அனிதாவின் மரணத்தை தொடர்ந்து பல்வேறு மாணவ மாணவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. இதனால், நீட் தேர்வு எதிராக ஆளும் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இருப்பினும், இதை எதையும் பொருட்படுத்தாத மத்திய அரசு, சமீபத்தில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும் அவர்கள் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது, மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகியது.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, ”நீட் விலக்கு, நம் இலக்கு” என்ற கையெழுத்து இயக்கம் தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசியவர், நீட் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு முதுநிலை நீட் மருத்துவ படிப்பிற்கு 0 மதிப்பெண் எடுத்தால் போதும் என்று கோழி முட்டையை கையில் எடுத்து காண்பித்து விமர்சனம் செய்தார்.