”நீட் குறித்து வெற்றி பெற்றவா்களிடம் உதயநிதி கேட்டு தொிந்து கொள்ள வேண்டும்” - அண்ணாமலை

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் அமர்ந்து பேசி நீட் தேர்வு என்றால் என்ன என்று அமைச்சா் உதயநிதி தெரிந்து கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவா் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா். 

கரூாில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அண்ணாமலை பங்கேற்று திருமாநிலையூரில் இருந்து தாந்தோணிமலை பெருமாள் கோயில் ஆர்ச் வரை நடைபயணம் மேற்கொண்டாா். தொடர்ந்து அவா் தாந்தோணிமலையில் திறந்த வாகனத்தில் நின்றபடி பேசுகையில், கரூரில் திமுகவினர் நீட்டுக்கு எதிராக போஸ்டர் ஒட்டுகின்றனர், தமிழ்நாடு முழுவதும் பள்ளி குழந்தைகளை பேருந்துகளில் ஏற்றி சென்று, நீட்டுக்கு எதிராக கையெழுத்து போட வைக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களிடம் அமர்ந்து நீட் தேர்வு என்றால் என்ன என்று அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினாா். 

இதையும் படிக்க : வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கொட்டி தீர்த்த கனமழை...!

தொடா்ந்து பேசிய அண்ணாமலை, அரசியலுக்கு வருவதற்கு முன்பு பூஜ்ஜியமாக இருந்த அமைச்சா் எ.வ.வேலு திமுக ஆட்சி அமைத்த 30 மாதத்தில் இரண்டு மருத்துவக் கல்லூரிகளை திறந்துள்ளதாக குற்றம்சாட்டினாா். 

வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய கரூர் மாநகராட்சி மேயர் மீது வருமான வரித்துறை வழக்கில் சிபிஐ விசாரணை உள்ளது. இன்னும் 3 மாதத்தில் அவா் சிறைக்கு செல்வது உறுதி என தொிவித்தாா். 

தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது அரிவாள் வெட்டு விழுவதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை, துரைமுருகன் உட்பட திமுக அமைச்சர்கள் அனைவரும் அடுத்து தன் மீது ரெய்டு வந்துவிடக்கூடாது என்று, கோயில் கோயிலாக செல்வதாக கூறினாா்.