கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்..!  அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!

கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்..!  அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!

கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கரூரில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

கரூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்டாங்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட 43 இடங்களில் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கோடைகாலத்தில் மின் தடை ஏற்படாத வண்ணம் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதால் மின்தடை குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என தெரிவித்தார். மேலும், மின் துறை சார்பாக புகார்கள் ஏதும் இருப்பின் மின்னகம் சேவை மைய எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவித்தால் உடனடியாக சரி செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார்.

தொடர்ந்து 3 மாதங்களுக்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கூடுதலாக, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் பெற்றால் 1312 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கும் என்பதால் முன்னேற்பாடாக தனியாரிடமிருந்து ஒப்பந்தம் போடப்பட்டு விலை குறைவாக மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்தார். 

மேலும், மின்சாரம் கைவசம் கூடுதலாகவே கையிருப்பில் இருப்பதாக தெரிவித்த அவர் காற்றாலை மின்சாரம் இன்னும் ஒரு சில வாரங்களில் கிடைக்கும் எனவும் கோடை காலத்தில் சீராக மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதியளித்தார்.