வைகை ஆறு சுத்தம் செய்யும் பணி தொடக்கம்!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை ஆற்றில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றை நீர் நிலைகள் பாதுகாப்பு குழுவினர் சுத்தம் செய்யும் பணி கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் தொடங்கியது. பாரம்பரியம் மிக்க வைகை ஆறு தேனி மாவட்டம் வருஷ நாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்கிறது. மானாமதுரை நகரின் மொத்த கழிவு நீர் மற்றும் பொதுமக்கள் விட்டுச் சென்ற குப்பைகள் என வைகை ஆறு மாசுபட்டுள்ளது. வைகை ஆறு முழுவதும் கருவேல மரங்கள், நாணல்களால் நீரோட்டமும் தடைபட்டு வருகிறது. 

அதே போல் மற்ற இடங்களில் கிழக்கு நோக்கி பாயும் வைகை ஆறு மானாமதுரையில் மட்டும் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் வைகை ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து நீர்நிலைகள் பாதுகாப்பு குழு சார்பாக இன்று வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணியை சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார். 

மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், சுரேஷ், பள்ளி மாணவ, மாணவியர்கள், நகராட்சி ஊழியர்கள். தன்னார்வலர்கள், பக்தர்கள், நீர்நிலைகள் பாதுகாப்பு குழுவினர், விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். 

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் நடந்த இந்த மெகா சுத்தம் செய்யும் பணியில் ஏராளமானோர் பங்கேற்று வைகை ஆற்றில் கிடந்த துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் நாணல்கள், கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.

இதையும் படிக்க || மர்ம காய்ச்சலால் அவதிப்படும் கிராமம்... ஒருவர் உயிரிழப்பு!!