தீவிரமடைந்த பருவமழை: மண் சரிவால் பல இடங்களில் பாதிக்கப்பட்ட வாகன போக்குவரத்து...!

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதே நேரத்தில் மண் சரிவு மற்றும் தரைப் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் பல இடங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...!

இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது வருகிறது. இதனால் அந்தியூர் மட்டம், நடூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான சாலைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஒருபுறம் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கோத்தகிரி - கொத்திமூக்கு சாலையை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதேபோல், கோவை மாவட்டத்தில் கொட்டிய கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - கோத்தகிரி மலைப் பாதையில் முதல்கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டது. அதேபோல், இரண்டாவது கொண்டை ஊசி வலைவு வரை சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொண்டன. சாலையோரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாறைகளும் உருண்டு விழுந்ததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, பாறைகள் மற்றும் வேருடன் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.