மூத்த தலைவர் நல்லகண்ணு 97-வது பிறந்த நாள்... வாழ்த்து மழையில் நனைத்த தலைவர்கள்...

இந்தியாவின் முதுபெரும் இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவின் 97-வது பிறந்த நாள் இன்று எழுச்சியாக கொண்டாடப்பட்டது.
மூத்த தலைவர் நல்லகண்ணு 97-வது பிறந்த நாள்... வாழ்த்து மழையில் நனைத்த தலைவர்கள்...
Published on
Updated on
2 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நலகண்ணு. இன்று அவருக்கு வயது 97. ஶ்ரீவைகுண்டத்தில் 1924-ம் ஆண்டு பிறந்தவர் நல்லகண்ணு. 18 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தேச விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் அவர் 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் 13 ஆண்டுகள், விவசாயிகள் சங்கத்தில் 25 ஆண்டுகள் என இன்றளவும் மக்களுக்கான போராட்டங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் நல்லகண்ணு. இன்றைய இளம் தலைமுறைக்கு முன்னோடியாக திகழும் எளிமையான தலைவர் நல்லகண்ணு. அனைத்து கட்சித் தலைவர்கள், தொண்டர்களால் பெரிதும் போற்றப்படுகிற நல்லகண்ணுவின் 97-வது பிறந்த நாள் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

நல்லகண்ணுவின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோரும் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளும் நேரில் சென்று நல்லகண்ணுவை வாழ்த்தினர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தினகரன் தமது ட்விட்டர் பக்கத்தில்,

80 ஆண்டு கால பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகவும், விடுதலைப் போராட்டம், ஏழை - எளிய மக்களுக்கான உரிமைப் போராட்டம், தமிழ்நாட்டின் வளங்களை காப்பதற்கான போராட்டம் என உழைத்துக் கொண்டே இருப்பவரும் சிறந்த பொதுவுடைமைவாதியுமான அன்புக்குரிய பெரியவர் திரு.R.நல்லக்கண்ணு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். சிறந்த உடல்நலத்தோடு இன்னும் பல ஆண்டு காலம் அவர் மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com