குடிநீர் பற்றாக்குறையால் காலி குடங்களுடன்  சாலையில் இறங்கிய கிராம மக்கள்! 

குடிநீர் பற்றாக்குறையால் காலி குடங்களுடன்  சாலையில் இறங்கிய கிராம மக்கள்! 

தருமபுரி: தருமபுரியில் குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்.

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டிக்குட்பட்ட எம்.ஜி. ஆர் நகர், பூதலான் கொட்டாய், ராமனன்கொட்டாய், குப்பன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து, பெரியாம்பட்டியில் காலி குடங்களுடன் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சரியாக வழங்கப்படுவதில்லை என்றும், குடிநீர் வழங்காததால் 200 க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் பெரும் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கும் கிராம மக்கள் டிராக்ட்டர்கள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி சாமளித்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் பிரச்சனையை சரி செய்யக்கோரி பெரியாம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திற்கு பல முறை தெரிவித்தும் எந்தவித பலனுமில்லாததால், வேறு வழியின்றி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட வேண்டியதாகிவிட்டது என தெரிவிக்கின்றனர் கிராம மக்கள்.

கிராம மக்கள், சாலை மறியில் ஈடுட்ட தகவலையறிந்த காரிமங்கலம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து,  சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் குடிநீர் பிரச்சனையை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.