65 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத 13 கிராமங்கள்!

65 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத 13 கிராமங்கள்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 65 ஆண்டுகளாக 13 கிராம மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடாமல் இருந்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எஸ்.மாம்பட்டி கிராமம். தாய் கிராமமாக கொண்ட இக்கிராம மக்கள்  1954 முதல் தீபாவளியை கொண்டாடுவதில்லை  இதனால் தீபாவளி அன்று இக் கிராமங்களில் பலகார மனம் வீசாது.  பட்டாசு சத்தம் கேட்காது, புத்தாடை உடுத்தி எவரையும் காண முடியாது, தீபாவளி பண்டிகைக்கு என  எந்த அறிகுறியும் இல்லாமல் உள்ளது இந்த கிராமங்கள்.

வழக்கம் போல தெருக்களில் விளையாடும் சிறுவர்கள் வயலுக்கு சென்று விவசாய பணிகள் செய்யும்  விவசாயிகள் மரத்தடியில் படுத்து உறங்கும் முதியவர்கள் ஆடு மாடுகள் மேய்க்கும் பெண்கள் கிராம கூடத்தில் அமர்ந்து அரட்டை அடித்து கதை பேசுபவர்கள்  என எங்கு பார்த்தாலும் நிறைந்த கிராமத்தின்  காட்சிகளைத் தான் காண முடியும்

அந்த காலத்தில் வறுமையால் வாடிய இந்த பகுதி மக்கள்  நெல்விதை, உழவு பணிகள், நடவு கூலி, அதற்கு தேவையான உரம், களை எடுப்பு, அறுவடை செய்ய கூலி என அனைத்திற்கும் கடன் வாங்கி விவசாயம் செய்த இவர்கள் நெல் அறுவடைக்கு பின் நெல்லை விற்று கடனை திருப்பி செலுத்தி வந்தனர்.

1954 க்கு முன் அந்த காலகட்டத்தில் தீபாவளிக்கு கடன் வாங்கி கொண்டாடியதால் நெல் அறுவடையை  கொண்டு விவசாய பணிகளுக்கு வாங்கிய கடனையும், தீபாவளிக்கு வாங்கிய கடனையும் செலுத்த முடியாமல் கிராம மக்கள் திணறியுள்ளனர் . 

இதற்கு முடிவு கட்ட  கிராமங்களில் உள்ள பெரியவர்கள் மந்தையில் ஒன்று கூடி விவசாய பணி காலத்தில் வரும் தீபாவளியை கொண்டாடுவது இல்லை என்றும் அதற்கு பதிலாக அறுவடைக்குப்பின் வரும் தமிழர் திருநாளான தை புத்தாண்டு முதல் நாளாம் உழைப்பின் உயர்வை உணர்த்தும் பெருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடுவது என ஊர் பெரியவர்கள் 1954-ல் முடிவு செய்தனர்.  

அன்று முதல் இக்கிராம மக்கள் இன்று வரை தீபாவளியை கொண்டாடுவதில்லை. தங்கள் குழந்தைகளுக்கும் இதை போதித்து வருகிறார்கள். எந்த ஊரில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தற்போது வசதி வாய்ப்பாக இருந்தாலும் முன்னோர்கள் வகித்து வந்த வறுமையின் கொடுமையை எண்ணி தீபாவளியை கொண்டாடாமல் இயல்பான வாழ்க்கையுடன்  வாழ்ந்து வருகின்றனர். 

நாடு முழுவதும் காலையில் வித விதமான புத்தாடை உடுத்தி பலவகையான பலகார வகைகளுடன் உண்டு ரக ரகமான பட்டாசுகளை வெடித்தும் மாலை மணமணக்கும் சிக்கன் மட்டனுடன்  விருந்து சாப்பிட்டும் இரவு சினிமாவிற்கு செல்லும் உலக மக்களே மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினாலும்  இந்த கிராமங்களில் மட்டும் அமைதியாக  தீபாவளிக்கான எந்த அறிகுறி இல்லாமல் இன்றும் இருந்து வருவது ஒரு மிகப்பெரிய வியப்பாகவும்  ஆச்சரியமாக உள்ளது என்றே கூறலாம்.

இன்றும் சிவகங்கை மாவட்டத்தில் சில கிராமங்களில் பறவைகளுக்காக, தியாகத்துடன் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினாலும் முன்னோர்களின் வறுமையை எண்ணி 65 ஆண்டுகளாக தீபாவளி எப்படி இருக்கும் என்று தெரியாமலே 13 கிராம மக்கள் வாழ்ந்து வருவது வியப்பின் உச்சமாக உள்ளது. 

வரும் காலங்களில் இது மாற்றம் அடையுமா இல்லை இன்னும் பல ஆண்டுகளுக்கு பழமை நடைமுறையே தொடருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இன்றைய காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று தங்களின் வாழ்வாதாரம் உயர்ந்தாலும் தங்கள் ஊர் கட்டுப்பாட்டை மீறாமல் வாழ்ந்து வரும் இன்றைய தலைமுறைகளும் தங்களின் பங்கை உணர்ந்து கடைபிடிப்பது ஆச்சரியமானது தான்.