ஸ்ரீமதி வழக்கில் கைதான ஐந்து பேர் சிபிசிஐடி முன் ஆஜர்!

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று விழுப்புரம் சிபிசிஐடி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.
ஸ்ரீமதி வழக்கில் கைதான ஐந்து பேர் சிபிசிஐடி முன் ஆஜர்!
Published on
Updated on
3 min read

கள்ளக்குறிச்சி: கனியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் உள்பட 5 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் கொடுப்பது முடிவற்ற நிலையில் இருக்க, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பேரில் இன்று, அந்த ஐவரும் விழுப்புரம் சிபிசிஐடி காவல்நிலைத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து, மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம், கலவரமாக மாறியதால் அந்த தனியார் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது. வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனியார் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். பள்ளியை சூறையாடியவர்களை வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதனிடையே, தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர்கள் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 5 பேரையும் கைது செய்ததற்கான காரணத்தை கூறவில்லை என்றால், விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு, மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கனியாமூர் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசங்கரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.தங்கசிவம், ‘மனுதாரருக்கும், இந்த சம்பவத்துக்கும் தொடர்பு எதுவும் இல்லை. அவர் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரைதான் பள்ளியில் இருப்பார். ஆனால், மாணவி இரவில் இறந்துள்ளார். அதற்கும், மனுதாரருக்கும் சம்பந்தம் இல்லை’ என்று வாதிட்டார். அதேபோல, பிற மனுதாரர்கள் சார்பிலும் வாக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதற்கு மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “முதலில் இந்த வழக்கு சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்டது. பின்னர், தற்கொலைக்குத் தூண்டியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் தற்கொலை கடிதம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்கக்கூடும். பள்ளித் தாளாளர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல இதே பள்ளியில் ஏற்கனவே 2 தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.” என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் எந்த முரண்பாடும் இல்லை என ஜிப்மர் மருத்துவமனை நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த சம்பவம் பாலியல் வன்கொடுமையோ, கொலையோ இல்லை என்றாலும், அப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் கொலை வழக்காக மாற்றவும் போலீசார் தயங்க மாட்டார்கள் என்று வாதிட்டார்.

மாணவியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, முதல் பிரேத பரிசோதனைக்கும், இரண்டாவது பிரேத பரிசோதனைக்கும் முரண்பாடு உள்ளது. பள்ளித் தாளாளரின் மகன்கள் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை என்பதால் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மதுரையிலும், 2 ஆசிரியைகள் என 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மதுரையிலும், 2 ஆசிரியைகள் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று ஜாமீன் வழங்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும், ஐந்து நபர்களின் நிபந்தனை ஜாமின் நேற்றுடன் முடிவட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பேரில், அவர்கள் ஐவரும் சிபிசிஐடி காவல் நிலையத்துக்கு நேரில் சென்று ஆஜராக கையெழுத்துப் போட்டனர்,

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com