மத வெறுப்பு அரசியலை முன்னெடுப்பவர்களை விசிக அம்பலப்படுத்தும் ....திருமாவளவன்...!!
அரசியல் ஆதாயத்திற்காக மத வெறுப்பு அரசியலை முன்னெடுப்பவர்களை விசிக அம்பலப்படுத்தும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிறித்தவ சமூகநீதி பேரவை சார்பில் ஒருங்கிணைக்கும் சமூகநீதி சமூகங்களின் கிறிஸ்து பிறப்பு பெருவிழா சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையில் உள்ள பிஷப் மாணிக்கம் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பின்னர் பேசிய திருமாவளவன் கூறுகையில்,
வாக்கு வங்கி அரசியலாக பார்ப்பது சராசரி அரசியல்வாதிகளின் பார்வை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி புரட்சியாளர் அம்பேத்கரையும் இயேசு பெருமானையும் சமத்துவம் என்ற கோட்பாட்டில் ஒன்றாக பார்க்கிறது என்று கூறினார்.
மனிதன் என்ற அடிப்படையில் அனைவரையும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது தான் விடுதலை சிறுத்தைகளின் அரசியல் என்றும் கிறிஸ்துவம் அந்நிய மதம் அல்ல, அது சமத்துவத்திற்கான தத்துவம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மத வெறுப்பு இங்கு அரசியல் ஆதாயத்திற்காக தூண்டப்படுகிறது, அந்த மத வெறுப்பு அரசியலை தான் விடுதலை சிறுத்தைகள் அம்பலப்படுத்தி வருகிறது என கூறிய அவர்,
அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதிபடுத்த வேண்டும் என்பதற்காக மத வெறுப்பு அரசியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது. சிறுபான்மையினர் நலன் காக்கும் களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றென்றும் ஜனநாயக சக்திகளோடு கைகோர்த்து நிற்கும் என தெரிவித்தார்.