விடுதியில் சாப்பிட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம்... நிர்வாகத்தை கண்டித்து திரண்ட பெண்கள்...

காஞ்சிபுரம் அருகே தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை கண்டித்து ஏராளமான பெண் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதியில் சாப்பிட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம்... நிர்வாகத்தை கண்டித்து திரண்ட பெண்கள்...

காஞ்சிபுரம் மாவட்டம்,  ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பூந்தமல்லியில் உள்ள விடுதியில் தங்கி பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு வழங்கப்பட்ட தரமற்ற உணவை உண்டதால், 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து நிர்வாகத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையில், பாதிக்கப்பட்ட பெண்களில் 8 பேரின் நிலை குறித்து நிர்வாகம் தரப்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இதுகுறித்து சந்தேகமடைந்த சக ஊழியர்கள், நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான பெண் ஊழியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.  அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.