விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை....

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை....

தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில், 2 கட்டங்களாக நடந்து முடிந்தது. மேலும், ஏனைய 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களிக்கான தேர்தலும் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தல் நடைபெற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில்  பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது, மாங்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வாக்கு எண்ணும் பணியில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என 400க்கும் மேற்பட்டோர் பணியில் உட்படுத்தப்பட்டு உள்ளனர். அங்கு குடிநீர், உணவு, கழிப்பறை உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை எனக் கூறி, வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அனைத்து விதமான வசதிகளையும் ஏற்படுத்தி தரும் வரை பணியில் ஈடுபட மாட்டோம் என தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் தனியார் கல்லூரி  மையத்தில், ஆயிரத்து 872 பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதில் காலதாமதம் ஆனதால், வாக்கு எண்ணிக்கையைப் புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் வாக்கு எண்ணும் மையத்தில், அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால், வாக்கு எண்ணும் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 7ஆவது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. அங்கு தபால் வாக்குகள் அடங்கிய பெட்டியின் சாவி காணாமல் போனதால், தேர்தல் அதிகாரிகள் வாக்கு பெட்டியைத் சுத்தியல் கொண்டு உடைத்து வாக்கு எண்ணிக்கையை தொடங்கினர். இந்த நிலையில், சாவியைத் தொலைத்த அதிகாரிகள் மீது விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் உள்ள காமாட்சி கணேசன் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை விக்கிரமசிங்கபுரம் அமலி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. அங்கும் தபால் வாக்கு பெட்டிகளின் சாவிகள் தொலைந்ததால், அதிகாரிகள் பூட்டுகளை உடைத்து வாக்குச்சீட்டுகளை எடுத்தனர்.

மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில், சரியான முன்னேற்பாடுகள் ஏதும் செய்யாமல் இருந்ததால், வாக்கு எண்ணும் அலுவலர்களும், முகவர்களும் நீண்ட நேரமாக வெளியில் நின்று கொண்டிருந்தனர். இதனால் வாக்கு என்னும் பணிகள் தொடங்க தாமதமான நிலையில், நீண்ட நேரத்திற்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரில், வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் பணி தொடங்க காலதாமதம் ஏற்பட்டதால், உடனடியாக வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் எனக் கூறி  அதிமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.