கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்... பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவிப்பு...

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்... பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவிப்பு...

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக புல்லரம்பாக்கம் மற்றும் ஜே.ஜே.நகர் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விஷ பூச்சிகள் அச்சுறுத்தல் மற்றும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கனமழை காரணமாக சுமார் 100 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த மணிலா, உளுந்து, கொய்யா உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.  மேலும் உத்திரமேரூர் அருகேயுள்ள வேடபாளையம் பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தொடர் மழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. மரக்காணம்  பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர், புதிய மனை ஈபி ஆபீஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.