நீர்நிலை ஆக்கிரமிப்பு: எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - உயர்நீதிமன்றம் கேள்வி

நீர்நிலை ஆக்கிரமிப்பு: எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? -  உயர்நீதிமன்றம் கேள்வி

நீர்நிலை ஆக்கிரமிப்பு புகார் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு வந்த புகார்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க, தமிழக அரசுக்கு டிசம்பர் 14-ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தமிழகத்தில் பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 90 ஆயிரத்து 48 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பாதுகாப்பது தொடர்பாக மாவட்ட மற்றும் மாநில அளவில் குழுக்கள் அமைக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாததால், வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்கு முன் நீர்நிலைகளை ஆயக்கட்டுதாரர்களே பராமரித்ததால் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் முறையாக பராமரிக்கப்பட்டதாகவும், சுதந்திரத்துக்கு பின் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்த பின் அவை முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும், அவை காகித அளவிலேயே இருப்பதால், நீர்நிலைகளை பாதுகாக்க மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பது தொடர்பாக மண்டல, மாவட்ட மற்றும் மாநில அளவுகளில் குழுக்கள் அமைத்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, அரசாணை நகலை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த குழுக்களிடம் அளிக்கப்பட்ட புகார்கள், நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க, அரசுத் தரப்புக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிக்க  | நவம்பர் 3-ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்..! தமிழக அரசு புதிய கோரிக்கை..!