”வெளிநாட்டு பயண முதலீடுகளை அறிய ஆவலாக உள்ளோம்” அண்ணாமலை பேட்டி!

”வெளிநாட்டு பயண முதலீடுகளை அறிய ஆவலாக உள்ளோம்” அண்ணாமலை பேட்டி!

வெளிநாட்டு பயணங்கள் மூலம் முதலமைச்சர் ஈர்த்துள்ள முதலீடுகளை அறிய ஆவலாக உள்ளோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனக்கு தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுற்றறிக்கையை வெளியிட்டு இருப்பதாக பேசியதை சுட்டிக்காட்டிய அவர், அமைச்சர் பொன்முடியின் ஒவ்வொரு பேச்சும் கீழ்த்தரமாக உள்ளதாக விமர்சித்தார்.

மல்யுத்த வீராங்கனைகள் அளிக்கும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் தேவை எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்துவரும் சூழலில் அமைச்சரை கைது செய்தால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

இதையும் படிக்க : சிங்கப்பூர் - மதுரை இடையே கூடுதல் விமானம் வேண்டும்... மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

தமிழ்நாட்டில் மூன்று மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், மாநில அரசு குறைகளை களைய வேண்டும் என வலியுறுத்திய அவர், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றம் என்பது மதுரை மண்ணிற்கு திமுக அரசு  செய்த துரோகம் எனவும் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதல் அத்துமீறிய செயல் என்று குற்றம்சாட்டினார். உலகிலேயே அதிக முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா உள்ளது எனவும், அதற்கு காரணம் பிரதமர் மோடி தான் எனவும் குறிப்பிட்டார். மேலும், வெளிநாட்டு பயணங்கள் மூலம் முதலமைச்சர் ஈர்த்துள்ள முதலீடுகளை அறிய ஆவலாக உள்ளதாகவும் கூறினார்.