அரசிலமைப்பை காப்போம் கையோடு கை கோர்ப்போம் - காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு

பிரியங்கா காந்தி தலைமையில் ஒவ்வொரு மாநிலத்திலும் மகளிர் பேரணி: கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

அரசிலமைப்பை காப்போம் கையோடு கை கோர்ப்போம் - காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு

பிரியங்கா காந்தி தலைமையில்
ஒவ்வொரு மாநிலத்திலும் மகளிர் பேரணி நடத்தப்படும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை
நடைப் பயணத்தின் தொடர்ச்சியாக "அரசியலமைப்பை பாதுகாப்போம்” மற்றும் "கையோடு கை கோர்ப்போம்” ஆகிய பரப்புரையை முன்னெடுப்பது சம்பந்தமான கலந்தாலோசனைக் கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவெல்ல
பிரசாத் முன்னிலையில்,
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

மேலும் படிக்க | உதயநிதி அமைச்சரான போது... பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு 


கடந்த 8 ஆண்டுகால ஆட்சியின் மூலம் பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வெறுப்பு அரசியல் மூலம் பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவாக்கும் நோக்கத்தில் அரசியல் ஆதாயத்தோடு செயல்பட்டு வருகிறது. இதனை முறியடிக்கிற வகையில் மக்களை ஒன்றுபடுத்துவதற்காக கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, 3500 கி.மீ. தூரத்தை 150 நாட்களில் கடந்து செல்லும் மாபெரும் இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி நிகழ்த்தி வருகிறார். 110 நாட்களை கடந்து மக்கள் பேராதரவோடு உத்தரபிரதேச மாநிலத்தை கடந்து அரியானா மாநிலத்தை அடைய இருக்கிறது. இது தேசிய அளவில் கருத்தியல் ரீதியாக மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திராவிட முன்னேற் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்தியவர்கள் ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணத்தில் பங்கேற்று பாராட்டி வருகிறார்கள். இது தலைவர் ராகுல்காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். 

2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் என்ற நம்பிக்கையை இந்த ஒற்றுமை நடைப்பயணம் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய நடைப்பயணத்தை மேற்கொண்டு மகத்தான சாதனை புரிந்து வருகிற தலைவர் ராகுல்காந்தி அவர்களை இக்கூட்டம் நெஞ்சாரப் பாராட்டுகிறது, வாழ்த்துகிறது.

தீர்மானம் : 2

ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமைப் பயணம் 2023 ஜனவரி 26 ஆம் தேதி காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நிறைவடைய இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அன்றைய நாள் முதல் அரசியல் சட்டத்தை பாதுகாப்போம் - கையோடு கை கோர்ப்போம் என்ற மாபெரும் பரப்புரை இயக்கத்தை முன்னெடுக்க வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு செயல் திட்டத்தை வகுத்தளித்திருக்கிறது. இதனை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில, மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம, வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய அமைப்புகளுக்கு இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ள செயல் திட்டத்தின்படி, மாபெரும் மக்கள் தொடர்பு பரப்புரை இயக்கம் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் விரிவாக்கமாக இருக்கும். 

2023 ஜனவரி 26 ஆம் தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு இவ்வியக்கம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். முதலில் வட்டார அளவில் இந்த பரப்புரை இயக்கம் தொடங்கப்படும். 

* ஒவ்வொரு கிராமம் மற்றும் வாக்குச்சாவடியை உள்ளடக்கிய நடைப்பயணம் இரண்டு மாதங்கள் நடைபெற வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு மாதம் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் இந்திய ஒற்றுமைப் பயண நினைவு கல்வெட்டுடன் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து நடைப்பயணத்தை தொடங்க வேண்டும். 

* ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். நடைப்பயணத்தில் ராகுல்காந்தியின் முக்கிய செய்திகளை தாங்கிய கடிதத்தை வீடு வீடாகச் சென்று விநியோகிக்க வேண்டும். 

* மக்கள் விரோத மோடி அரசு மீதான குற்றச்சாட்டுகளை துண்டு பிரசுரமாக அச்சடித்து மக்களிடையே விநியோகம் செய்ய வேண்டும். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் குறித்த ஸ்டிக்கரை ஒவ்வொரு வீட்டின் கதவிலும் ஒட்ட வேண்டும். 

* இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் உணர்ச்சிபூர்வமான வீடியோக்களை ஒவ்வொரு கிராமத்திலும் திரையிட வேண்டும். இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் சார்பில் அந்த பகுதிகளில் இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட வேண்டும். 

மேலும் படிக்க | எனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் - மனம் திறந்த ராகுல் காந்தி

* ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும், அந்த பகுதியில் பல்வேறு துறைகளில் பிரபலமானவர்களை உள்ளடக்கி தொண்டர்கள் திருவிழா என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட வேண்டும். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைவர் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற வேண்டும். 

* மாநில அளவில் மாபெரும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் சிறப்புகளையும், அரசியல் தாக்கங்களையும் எடுத்துரைக்க வேண்டும். இந்நிகழ்வுகளில் இளைஞர்கள் மற்றும் பெண்களை பெருமளவில் திரட்ட வேண்டும். 

* ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயண காணொலி காட்சிகளை பிரம்மாண்ட எல்.இ.டி. திரைகளில் முக்கிய இடங்களில் திரையிட வேண்டும்.

பிரியங்கா காந்தி தலைமையில் பேரணி :

* புகழ்பெற்ற பாடகர்கள், கலைஞர்கள், சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்போரின் இன்னிசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உச்சகட்டமாக பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்த வேண்டும். இந்த பேரணியில் மகளிர் கொள்கை விளக்க அறிக்கையை பிரியங்கா காந்தி  வெளியிடுவார்கள். 

* தமிழகத்தில் நடைபெறவுள்ள இம்மாபெரும் பரப்புரை இயக்கம் மாநில அளவில் 2023 ஜனவரி 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மாவட்ட அளவிலான பார்வையாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் அனுப்பப்படுவார்கள். அதேபோல், மாவட்ட அளவில் ஜனவரி 15 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதிக்குள் நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டிகள் அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ள வேண்டும்.

*  ராகுல்காந்தி  தம்மை கடுமையாக வருத்திக் கொண்டு இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டிருப்பதால் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியை முழுமையாக பயன்படுத்துகிற வகையில் மேற்கண்ட செயல் திட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக நிறைவேற்ற வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இத்தகைய செயல் திட்டங்களின் மூலமே மத்தியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதற்கான ஆதரவை மக்களிடையே திரட்ட முடியும் என்று இத்தீர்மானத்தின் மூலம் இக்கூட்டம் வலியுறுத்துகிறது. 

தீர்மானம் : 3


ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய அருண்குமார் என்ற பி.காம் பட்டதாரி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. இதுவரை ஆன்லைன் சூதாட்ட மோசடியால் ஏறக்குறைய 25 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அவலநிலையை முடிவுக்கு கொண்டு வருகிற நோக்கத்தில் தான் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டப்பேரவையில் அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28 ஆம் தேதி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி சட்டத்துறை அமைச்சர் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை ஒப்புதல் தராமல் மசோதாவை முடக்கி வைத்திருக்கிறார். 

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமை தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவிக்கு இருக்கிறது. ஆனால், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் முடக்கி வைப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. இது தமிழக மக்களின் நலனை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும். ஆன்லைன் சூதாட்டத்தினால் அருண்குமாரைப் போன்ற 25-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழக ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும். 

ஆன்லைன் சூதாட்ட மசோதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை முடக்கி வைத்திருக்கிற தமிழக ஆளுநருக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்க விரும்புகிறோம் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், விஜய் வசந்த் எம்.பி., பழனி நாடார் எம்.எல்.ஏ., துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, 
உ.பலராமன், இதயத்துல்லா, கீழனூர் ராஜேந்திரன், இமயா கக்கன், பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, எஸ்.ஏ.வாசு, மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம், 
மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அடையார் பாஸ்கர்,
பிரிவு தலைவர்கள் குங்ஃபூ விஜயன், பி.எஸ்.புத்தன், அஸ்லம் பாஷா, 
மாநில செயலாளர்கள் முனீஸ்வர் கணேசன், அப்துல் காதர், ரஞ்சித் குமார், விருதை பட்டாபி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.