விசேஷங்களுக்கு திருமண மண்டபம்.. இறப்புக்கு ஐஸ் பெட்டி.. மக்களை கவரும் உசிலம்பட்டி திமுக வேட்பாளர்..!

விசேஷங்களுக்கு திருமண மண்டபம்.. இறப்புக்கு ஐஸ் பெட்டி.. மக்களை கவரும் உசிலம்பட்டி திமுக வேட்பாளர்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக பெண் வேட்பாளர் ஒருவர் பல்வேறு வித்தியாசாமான  வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகிறார். இவர் அளித்த வாக்குறுதிகள் மக்களை ஈர்த்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே சமயத்தில் நடைபெறுகிறது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் சகுந்தலா. இவர் உசிலம்பட்டி நகராட்சி, 11-வது வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிடுகிறார். திமுக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெரும் பட்சத்தில் சகுந்தலா உசிலம்பட்டி நகராட்சி தலைவராக கூட வருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே 11-வது வார்டு திமுக வேட்பாளர் சகுந்தலா அளித்த வாக்குறுதிகள் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அவர் வெளியிட்ட வாக்குறுதிகள்:-

11-வது வார்டு வாக்காளர் இல்லங்களில் நடைபெறும் விசேஷங்களுக்கு VKS மண்டபம் இலவசமாக வழங்கப்படும்.

11-வது வார்டு மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாக்கடை வசதி, தெரு குழாய்கள், தெரு விளக்குகள், சாலை வசதிகள் அனைத்தும் உடனடியாக சரி செய்து தரப்படும்.

11-வது வார்டு வாக்காளர்களுக்கு பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் நகராட்சியில் உடனடியாக எந்தச்செலவுமின்றி வாங்கித்தரப்படும். முதியோர் மற்றும் விதவைகள் உதவித்தொகை உடனடியாக எந்தச்செலவுமின்றி வாங்கி தரப்படும்.

11-வது வார்டு இறந்தவரின் உடலை பாதுகாப்பாக வைப்பதற்கு ஐஸ் பெட்டி இலவசமாகத்தரப்படும். மேலும், வாக்காளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக நிறைவேற்றப்படும்.

திமுக பெண் வேட்பாளரின் வாக்குறுதிகள் வினோதமாக இருந்தாலும் மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இருக்கிறது.