சமூக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாக கோவில் முன்பு குவிந்த திருமண கோஷ்டியினர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவணி மாதம் கடைசி முகூர்த்தத்தை முன்னிட்டு சமூக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாக முருகன் கோவிலில் கல்யாண கோஷ்டியினர் குவிந்தனர்.

சமூக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாக கோவில் முன்பு குவிந்த திருமண கோஷ்டியினர்

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்த சூழ்நிலையில் அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நோய்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருந்தபோதிலும் மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அக்டோபர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த கட்டுப்பாடுகளில் மிக முக்கியமானது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று கிழமைகளில் மத வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்பது ஆகும். இந்நிலையில்  ஆவணி மாத வளர்பிறை கடைசி முகூர்த்த தினமும் விநாயகர் சதுர்த்தியான இன்று தமிழகம் முழுவதிலும் பல்வேறு திருமணங்கள் நடைபெற்றது.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் கோவிலுக்குள் வைத்து நடைபெற வேண்டிய திருமணங்கள் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் கோவில் வாசலில் நடைபெற்றது. 

காலையிலிருந்தே பத்துக்கும் மேற்பட்ட திருமண கோஷ்டியினர் கோவிலுக்கு முன்பு குவிந்த வண்ணம் இருந்தனர். தொடர்ந்து மணமகன்கள் மணமகள்களுக்கு அவரவர் உறவினர்கள் முன்னிலையில் தாலி கட்டினார். அதையடுத்து மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவமும் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு ஒவ்வொரு திருமண கோஷ்டியும் வாகனங்களில் வேன், கார் உள்ளிட்டவைகளில் ஏறி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். 

பத்துக்கு மேற்பட்ட திருமணம் கோஷ்டிகள் ஒன்று கூடியதால் காலை முதலே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை பரபரப்பாகவே காணப்பட்டது. குறிப்பாக நோய்தொற்று பரவலை தடுக்க மாஸ்க் அணியாமல் செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறையின், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள கோவிலில் கூட்டம் கூடியது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது