அண்ணாமலை -திருமாவளவன் சந்திப்பு; பேசிக்கொண்டது என்ன? 

Published on
Updated on
1 min read

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் கடந்த 19-ம் தேதி இயற்கை எய்தினார். 20-ம் தேதியன்று இறுதிச் சடங்கு நடந்து முடிந்தது. சித்தர் பீடத்தின் உள்ளேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து நேரில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று பங்காரு அடிகளாரின் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அடிகளாரின் சமாதிக்குள் நுழைந்தவர், தீபாராதனை காட்டி வழிபட்டு, நெற்றியில் திருநீர் இட்டுக் கொண்டது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், பங்காரு அடிகளார் ஆன்மிகத்தில் சமூகநீதியை நிலைநாட்டியவர் என புகழாரம் சூட்டினார். 

பங்காரு அடிகளாரின் சமாதியில் வழிபாடு நடத்தி விட்டு திருமாவளவன் கிளம்ப, அதே நேரத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வந்ததால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

அண்ணாமலை மற்றும் எல்.முருகன், மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் நேரில் சென்று பங்காரு அடிகளாரின் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து, பங்காரு அடிகளாரின் இல்லத்துக்கு சென்றவர்கள், அடிகளாரின் மனைவி லட்சுமி அம்மாளிடம் ஆறுதல் தெரிவித்து, பிரதமர் மோடி அளித்த இரங்கல் கடிதத்தை வாசித்து காட்டி அவரிடம் வழங்கினார். இதையடுத்து நிரூபர்களை சந்தித்த எல்.முருகன், பிரதமர் மோடி, பங்காரு அடிகளாரின் மீது அதீத பக்தி கொண்டிருந்ததாக குறிப்பிட்டார். 

பா.ஜ.க.வை சேர்ந்த அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் சந்தித்து கை குலுக்கி, உடல் நலம் விசாரித்தனர். கொள்கை ரீதியாக இரு துருவங்களாக செயல்பட்ட அண்ணாமலை - திருமாவளவன், துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் ஒன்றாக சந்தித்துக் கொண்டது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com