கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருகிறார் - நீதிபதி சரமாரி கேள்வி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி, என்ன செய்து கொண்டிருந்தார்? என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ள உச்சநீதிமன்றம், இதுகுறித்த வழக்கை டிசம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 

ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே தொடக்கம் முதலே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. 

இதன் ஒருபகுதியாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாமல் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிக்க : ஆளுநா் ஆா்.என். ரவிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை...!

அதே நேரத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் காரசார விவாதம் முன்வைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. 

ஆகவே, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநருக்கு கால வரையறை நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு முறையும் ஒப்புதல் கோரி உச்சநீதிமன்றத்தை நாட முடியாது என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் வாதங்களை ஏற்றுக் கொண்டு  தலைமை நீதிபதி சந்திரசூட், கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. அப்படி என்றால், கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி என்னதான் செய்து கொண்டிருக்கிறார்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.