பள்ளிகளில் கொரோனா பரவக் காரணம் என்ன?... மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை...

விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதேபோல் பள்ளிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார்.

பள்ளிகளில் கொரோனா பரவக் காரணம் என்ன?... மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை...

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்பட்டன. அன்றைய நாள் முதல் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாவது அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரவக் காரணம் என்ன? கொரோனா பரவாமல் தடுக்க செய்ய வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்த உள்ளார். 

காணொலி காட்சி வாயிலாக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதூர்த்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக, அதிகாரிகளுடன் இன்று  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். வரும் 15-ம் தேதியுடன் கொரோனா ஊரடங்கு முடிவடையும் நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் ஆலோசனை நடைபெற உள்ளது. தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.