உள்ளாட்சி தேர்தல் எப்போது..?  15ஆம் தேதி அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்...

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் எப்போது..?  15ஆம் தேதி அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்...

தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் கடந்த 2019 டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி மாதங்களில ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகள் காரணமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம், தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் என்று மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

ஆனால், மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல், சட்டப்பேரவை கூட்டத்தொடரை காரணம் காட்டி 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், 15-ம் தேதி சென்னை மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும்? என்பது தொடர்பான முழு அறிவிப்பை ஆணையர் பழனிகுமார் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.