ஜாதி வாரியாக இந்த குழுவில் உறுப்பினர்களை நியமிக்கவில்லையாம்... கொந்தளிக்கும் வானதி ஸ்ரீநிவாசன்

ஜாதி வாரியாக இந்த குழுவில் உறுப்பினர்களை நியமிக்கவில்லையாம்... கொந்தளிக்கும் வானதி ஸ்ரீநிவாசன்

தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் " சமூக நீதி " எங்கே?? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதேபோல், தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த உரையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கான 'பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைக்குழு' அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். 

ஐந்து பேர் கொண்ட இக்குழுவில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழக ஜான் த்ரே, ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ். நாராயணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நியமனம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவான கருத்துக்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் இந்த நியமனத்தில் சமூகநீதி எங்கே என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார். 

தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வருக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் இடம் பிடித்தவர்களின் பெயர்கள், படங்கள் ஆகியவற்றுடன் தமிழ்நாடு அரசு வெளியிட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், அதில் "தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் சமூக நீதி எங்கே" என்று கூறியுள்ளார். 

அதாவது முதல்வருக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் இடம்பிடித்தவர்களில் மூன்று பேர் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், அனைத்திலும் சமூகநீதி பேசும் திமுக இப்படி செய்திருக்கிறது என்றும் திமுகவை மறைமுகமாக சாடியுள்ளார்.