சொந்த நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களையே சுட்டுப்படுகொலை செய்வதா? இது நாடா? இல்லை! சுடுகாடா?....சீமான் ஆவேசம்....!!

நாகலாந்து மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அப்பாவி பொது மக்களில் 19 பேர் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சொந்த நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களையே சுட்டுப்படுகொலை செய்வதா? இது நாடா? இல்லை! சுடுகாடா?....சீமான் ஆவேசம்....!!

நாகாலாந்து படுகொலைகள் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகலாந்து மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அப்பாவி பொது மக்களில் 19 பேர் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. நாடு முழுக்கப் பெரும் கொதிநிலையையும், கடும் எதிர்ப்பையும் உருவாக்கியிருக்கும் இச்சம்பவத்தின் மூலம் நாட்டுமக்களின் பாதுகாப்பும்,மக்களாட்சித் தத்துவமும் முழுமையாகக் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

இது மக்களுக்கான நாடா? மக்களைக் கொன்றொழிக்கும் சுடுகாடா? என உள்ளச்சீற்றம் ஏற்படுகிறது. பழங்குடியினரைப் படுகொலை செய்துவிட்டு, பயங்கரவாதிகளென நினைத்துத் தவறுதலாகச் சுட்டுக்கொன்றுவிட்டோம் எனக்காரணம் கற்பிக்க முயலும் இந்திய இராணுவத்தினரின் செயல்பாடு மிக மிக இழிவானது.


அந்நிய ஆக்கிரமிப்புகளிலிருந்தும், தாக்குதல்களிலிருந்தும், இன்னபிற சிக்கல்களிலிருந்தும், இயற்கைச்சீற்றங்களிலிருந்தும் சொந்த நாட்டு மக்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்நாட்டு இராணுவம், இம்மண்ணின் மக்களையே, போற்றிக்கொண்டாட வேண்டிய ஆதித்தொல்குடிகளையே, காக்கை, குருவியைச் சுடுவது போலச் சுட்டுக்கொலை செய்தது கடும் கண்டனத்திற்குரியது. எதன்பொருட்டும், எத்தகையக் காரணத்தினாலும் இதுபோன்றப் பச்சைப்படுகொலைகளை, அரசப்பயங்கரவாதச்செயல்களை ஒருநாளும் ஏற்க முடியாது.

சொந்த நாட்டு மக்கள் மீதே இராணுவத்தினரால் ஏவப்பட்ட இத்தகைய அரச வன்முறையை, பயங்கரவாதத்தாக்குதலை வன்மையாக எதிர்க்கிறேன். இக்கோரச்சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கும் கொடுஞ்சூழலிலும், இதுகுறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்காது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலோ, கொலைசெய்த இராணுவ வீரர்களுக்குக் கண்டனமோ பதிவுசெய்யாது பிரதமர் நரேந்திரமோடி அமைதிகாப்பது வெட்கக்கேடானது. பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கையும், அதிகாரத்திமிரில் செய்யும் அநீதிகளையும், அட்டூழியங்களையும் நாட்டு மக்கள் நீண்டகாலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இவற்றிற்கான எதிர்வினையை, பதிலடியைக் கட்டாயம் ஜனநாயக முறையிலேயே திருப்பித்தருவார்கள் என அறுதியிட்டுக் கூறுகிறேன். ஆகவே, நாடு முழுக்க எழுந்திருக்கும் எதிர்ப்பலையையும், மக்களின் உணர்வுகளையும் இனிமேலாவது புரிந்துகொண்டு பழங்குடி மக்களைக் கொன்றொழித்த இராணுவ வீரர்களைக் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து உடனடியாகச் சிறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,

கொலைசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் குடும்பத்தினருக்குத் தலா 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், அம்மண்ணை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்தினரை உடனடியாகத் திரும்பப் பெறச் செய்ய வேண்டுமெனவும் ஒன்றிய அரசையும், நாகலாந்து மாநில அரசையும் வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.