”புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஏன் பங்கேற்கவில்லை” - அப்பாவு கேள்வி

”புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஏன் பங்கேற்கவில்லை” - அப்பாவு கேள்வி

தேர்தலை கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஏன் பங்கேற்கவில்லை எனவும் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு:-

”புதிய நாடாளுமன்றத்தில் நேற்று மகளிர்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தலை கருத்தில் கொண்டே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், மகளிர்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா கடந்த 2008-ம் ஆண்டு முதலே தொடர்கதையாக உள்ளதாகவும் கூறினார்.

மேலும், மத்திய அரசு முழுமையாக நிறைவேற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறிய அவர், இந்த சட்ட மசோதாவை கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்திருந்தால் இந்த செயல்பாட்டை வரவேற்றிருப்போம் என்றும், தற்போது இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற தொகுதி வரையறை செய்ய வேண்டும் அதற்கு முன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.  இத்தகைய பணிகள் எதுவுமே நடைபெறாத நிலையில் இந்த மசோதா தற்போது தாக்கல் செய்து நடைமுறைப்படுத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள அரசுக்கு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான அதிகாரத்தை பறிக்கக்கூடிய வகையில் அசுர வேகத்தில் செயல்பட்டு சட்டத்தை நிறைவேற்றிய பாஜக, அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டத்தில் அவ்வாறு செயல்படாதது ஏன்? எனவும்  கேள்வி எழுப்பினார்.

பழைய நாடாளுமன்ற கூட்டத்தில் கடைசி கூட்டத்திலும், அதன்பிறகு  புதிய நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் கூட்டத்திலும் நாட்டின் குடியரசு தலைவராக இருக்கக்கூடிய திரௌபதி முர்முவை  அழைக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

அவர் புறக்கணிப்பு செய்யப்பட்டதற்கான காரணம் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் என பத்திரிக்கைகளில் செய்திகள் வருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக ஆளுநரிடம் பேரவைகள் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 11 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது குறித்து ஏழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,

“பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்களை எவ்வளவு காலத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என சிம்லாவில் நடந்த மாநாட்டில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், தனக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்றும் பேரவைகள் நிறைவேற்றி அனுப்பக்கூடிய மசோதாக்களுக்கு ஒப்பதல் அளிப்பது மட்டுமே இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஆளுநரின் கடமையாகும்”,  என கூறினார்.

” நம் நாடு மதச்சார்பற்ற நாடாக உள்ள நிலையில் தமிழக ஆளுநர் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று நம் நாடு மதசார்புள்ள நாடு என பேசி வருகிறார்; இதனை தவிர்க்க வேண்டும்”,  எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க  | "அக்டோபர் மாதம் முதல் இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து" அமைச்சர் எ.வ.வேலு தகவல்!