"காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுடன் முதலமைச்சர் பேசாதது ஏன்" - எடப்பாடி கேள்வி

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலளார்  எடப்பாடி பழனிச்சாமி உறுதிபட தெரிவித்தார்.  

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2 கோடியே  72 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 திட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அத்துடன், புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி,  அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து மீண்டும் தெளிவுபடுத்தினார். பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று உறுதிபட தெரிவித்தார். அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார்.

இதையும் படிக்க : சிக்னலைக் கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு...!

பாஜக தேசியத் தலைவர்களுடன் தங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி,  தமிழக பாஜகவினரின் விரும்பத்தகாத பேச்சு தங்களை காயப்படுத்தி விட்டதாக தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரத்தில், கர்நாடக அரசுடன் தமிழ்நாட்டு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என சாடிய எடப்பாடி பழனிச்சாமி, மின் கட்டண உயர்வு, சொத்து வரி ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டினார்.